வேதசாட்சியான புனித சாந்தியப்பரே!
உமது பிள்ளைகள் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்! - 3
1. அன்பின் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைத்து துறவியர்கள், நாட்டுத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், அனைவருக்கும், ஞானத்தையும் விவேகத்தையும் தந்து, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களை சரியான வழியில் நடத்தி செல்ல வேண்டுமென்று.
2. அன்பின் ஆண்டவரே! மக்கள் அனைவரும் சமாதானத்திலும், ஒற்றுமையிலும், அன்பிலும் நிலைத்து வாழ்ந்து முதல் கிறிஸ்துவர்களைப் போல், ஜெபத்திலும், பகிர்தலிலும் ஒரே அன்பியமாய் வாழ வேண்டுமென்று.
3. இரக்கம் நிறைந்த இறைவா! இந்த நவநாள் பக்தி முயற்சிகளைச் செய்யும் அனைத்து இளைஞர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர், தங்கள் எதிர்கால வாழ்வை தூய ஆவியின் துணையால் கண்டுணர்ந்து தீமைகளை அகற்றி, நன்மைகளை புரிந்து, பெற்றோர், பெரியோர், வழிகாட்டுதலில் நலமுடன் வாழ வேண்டுமென்று.
4. நம்பினோர்க்கு வாழ்வளிக்கும் இறைவா! இங்கு உம்மை நம்பி வந்துள்ள அனைவரின் கருத்துகளுக்காகவும், மன அமைதிக்காகவும், உடல் நலத்திற்காகவும், குடும்பத்திலும் ஊரிலும் ஒற்றுமையையும், சமாதானத்தையும், வறுமை, வறட்சி நீங்கி வளமான வாழ்வையும் தந்து காத்தருள வேண்டுமென்று.
5. இறைவா மக்கள் அனைவரும் உமது வல்லமையை காணவும், உமது அளவில்லா அன்பை உணர்ந்து, அதில் நிலைத்து வாழவும், உம்மை நம்பி இறந்துபோன அனைத்து விசுவாசிகளின் ஆன்ம இளைப்பாற்றிக்காவும், இறக்கும் தருவாயில் அவதிப்படும் அனைவருக்கும் அமைதியான நல்ல மரணத்தை தந்தருள வேண்டுமென்று.
நன்றியறிதல் ஜெபம்!
இறைவா! உம் மக்களாகிய எங்களுக்கு / புதிய அருள் வாழ்வை அளிப்பதற்காகவும் / திருச்சபை மூலம் நீர் தந்துள்ள / திருவருட் சாதனங்கள் வழியாக / நாங்கள் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும் இந்த நவநாள் வழிபாட்டில் பங்கு பெற்று / அடைந்த எல்லா வரங்களுக்காகவும் எங்கள் நம்பிக்கையால் / நாங்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அடைந்துள்ள / அனைத்து உதவிகளுக்காகவும், வேத சாட்சியான புனித சந்தியாகப்பர் வழியாக / இறைவா உமக்கு நன்றி செலுத்துகின்றோம். மென்மேலும் நாங்கள் / உம்மீது உள்ள நம்பிக்கையை இழக்காது / என்ன நேர்ந்தாலும் உறுதியான மனதோடு / உம்மை பின் செல்லும் வரம் தாரும் - ஆமென்.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உமது சீடரான புனித சந்தியாகப்பரை போற்றி புகழும் எங்களுக்கு, என்றும் உதவி செய்ய தயாராக இருக்கும் புனிதரை எங்களுக்கு தந்துள்ளீரே அந்த புனிதரின் புதுமையை நாடி வரும் நாங்கள், உமது மீட்பின் பலன்களை இறுதிவரை அடைந்து, உமக்கும் புனித சந்தியாகப்பருக்கும், அன்னை மரியாளுக்கும் ஏற்ற மக்களாக வாழ்ந்து, உம்மை சாட்சிகளாய் என்றும் வாழ எங்களுக்கு அருள் தாரும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
ஆண்டவரே இரக்கமாயிரும்!
கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
ஆண்டவரே இரக்கமாயிரும்!
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்!
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும்!
விண்ணகத்திலும் மண்ணகத்திலும் இருக்கும் எங்கள் தந்தையே - எங்கள் மேல் இரக்கமாயிரும்.
எங்களை மீட்ட இயேசு கிறிஸ்துவே - எங்கள் மேல் இரக்கமாயிரும்.
எங்களை விசுவாசத்தில் பலப்படுத்தும் தூய ஆவியானவரே - எங்கள் மேல் இரக்கமாயிரும்.
மூவொரு இறைவனாகிய ஆண்டவரே - எங்கள் மேல் இரக்கமாயிரும்.
இறைவனின் புனித மரியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
நல் மரணத்திற்கு பாதுகாவலாம் புனித சூசையப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இறைவனின் புனித தூதர்களே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
வேதசாட்சியான புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தேவ அன்னையினால் மிகவும் அன்பு செய்யப்பட்ட புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபதேயுவின் அன்பு மகனான புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசு உம்மை அழைத்தபோது, தந்தையையும், வலைகளையும் விட்டு உடனே அவரைப் பின்சென்ற புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசுவால் உம் சகோதரர் யோவானாடு, இடியின் மக்கள் என அழைக்க வரம் பெற்ற புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசு பூங்காவனத்துக்கு போனபோது உடன் சென்ற புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசுவின் விண்ணேற்றத்திற்க்குப் பின் உயிர்த்த ஆண்டவரின் சாட்சியாக அவரைவிட வேறு கடவுள் இல்லை என்று யூதேயா, சமாரியா நாடுகளில் இறைபணி செய்த புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஸ்பெயின் நாட்டில் எண்ணற்ற மக்களுக்கு உண்மை மறையை போதித்து, மந்திரவாதியான ரமோசான் என்பவருக்கு திருமுழுக்கு அளித்த புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உறுதியான மனதுடன் இயேசுவைப்பற்றி போதித்ததை கேட்ட ஏரோது அக்கரிப்பா, உமக்கு மரணத்தீர்ப்பு அளித்தபோது அதை இயேசுவுக்காய் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு வேதசாட்சியாய் மரித்த புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கொலைக்களத்துக்கு உம்மை அழைத்துச் சென்றவன் கிறிஸ்தவன் என்பதை கேட்டு அறிந்து பெருமகிழ்ச்சியுற்ற புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கொலைக்களத்திற்கு உம்மை அழைத்துச் சென்ற கொலைஞன் உம்மிடம் பாவமன்னிப்பு கேட்டபோது சமாதானத்தை அளித்த புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
வானதூதர் புடை சூழ இத்தாலி நாட்டில் உண்மை மறையைப் போதித்த புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
எபேசு நகரில் தேவ அன்னையை அற்புதமான வகையில் கண்டு தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தேவ அன்னை உம் கரம் பிடித்து தூக்கி நிறுத்தி, அந்த விண்ணக மண்ணக அரசியின் எண்ணற்ற வரங்களையும் பெற்ற புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
எருசலேமில் நீர் வேதசாட்சியாக இறப்பீர் என்று தேவ அன்னையின் மூலம் அறிந்து அவ்வேளையில் அன்னையின் உதவியை மன்றாடி பெற்ற புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
எருசலேமில் விசுவாசத்தோடு நீர் போதித்ததை கண்ட வேத விரோதிகள் உம்மை சிறை பிடித்தபோது தேவ அன்னையை நோக்கி மன்றாடிய புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உமது திருவுடல் கம்போஸ்தலா என்னும் நகருக்கு கொண்டு செல்ல. அங்கு பலப் புதுமைகள் நிகழவே, மக்களால் மரியாதையோடு வணங்கப்பட்ட புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
நீர் விண்ணகம் சென்றபின் ஸ்பெயின் நாட்டின் கிறிஸ்துவர்களை எதிர்த்து படையெடுக்க அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக் கொண்ட போது, பகைவர் அஞ்சி ஓடும் படியாக வெள்ளைக் குதிரை மேல் ஏறி வந்து, அவர்களை விரட்டியடித்த புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே - எங்கள் மேல் இரக்கமாயிரும் சாமி.
உலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே - எங்கள் பாவங்களை போக்கியருளும் சாமி.
உலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே - எங்களுக்கு சமாதானத்தை தந்தருளும் சாமி.
செபிப்போமாக
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே வேதசாட்சியும், உமது சீடருமான புனித சந்தியாகப்பருக்கு உயர்ந்த வரங்களை கொடுத்து, எருசலேம் நகரிலும், ஸ்பெயின், இத்தாலி நாடுகளிலும், மறவபட்டியிலும் அவரால் பல புதுமைகளை செய்வித்து, எண்ணற்ற மக்களை திருட்சபைக்கு அழைத்தீரே அவரை போற்றி புகழ்ந்து வணங்குகிற எங்களுக்கும் இவ்வுலகின் ஆசைகள், சாத்தானின் ஆதிக்கங்கள், துன்பங்கள் அனைத்தையும் வென்று, முடிவில்லா பேரின்பத்தை பெற அருள் புரியுமாறு புனித அடைக்கலமாதா வழியாகவும், எங்கள் பாதுகாவலரான புனித சந்தியாகப்பர் வழியாகவும் உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் - ஆமென்.
s