Maravapatty, Dindigul-624709.

Contact: 00000

maravapatty.santhiyagappar@gmail.com

    Maravapatty, Dindigul-624709.

Contact: 0000

maravapatty.santhiyagappar@gmail.com

Our Blog

பயன் அடைந்தோர்

மணியார் ஆரோக்கியம் (காளை)

இவர் இரவில் வீட்டை விட்டு வெளியே வந்தபோது கோவில் வீதியில் வெண்குதிரையில் பளிச்சென்று சந்தியாகப்பர் தோன்றினார்.

அகஸ்தீன்

இவர் மில் வேளைக்குச் சென்று இரவில் வீடு திரும்பும்போது 2 மணியளவில் மூன்று பேய்கள் இவரை வழிமறித்து நின்றது. அப்பொழுது இவர் மனம் உருகி சந்தியாகப்பரே நீரே எனக்குத் துணை! நீர் வரவில்லை என்றால் நான் செத்தேன் என்று சொன்னார். நமது பழைய ஆலயத்தின் கோபுரத்தில் பளிச்சென்று மின்னல் போல் சந்தியாகப்பர் கிளம்பி வந்து பேய்களை சாட்டையால் அடித்து விரட்டினார்.(நேரில் நடைபெற்ற சம்பவம் ).

மறவபட்டி (உலகம்பட்டியார் தோட்டம்) பாலு என்ற ராயப்பன்

இவர் மறவப்பட்டி கோவிலில் புனிதர்களின் சுரூபத்திற்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது வேடிக்கை பார்த்துக்கொண்டு தூங்கிவிட்டார். இவர் நள்ளிரவில் விழித்து வீடு திரும்பும் வழியில் பேய்கள் இவரை வழிமறித்தது. அப்போது இவர் சந்தியாகப்பரே இப்பொழுது தானே உம்மிடம் இருந்து வந்தேன். என்னை பேய்கள் வழிமறித்ததுக் கொண்டதே! நீரே என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று கத்தியவுடன் கோவிலின் கோபுரத்திலிருந்து ஒரு ஒளி வருவதைக் கண்டார். வெள்ளைக் குதிரையில் சந்தியாகப்பர் நேரில் வந்து பேய்களை அடித்து விரட்டி இவரைக் காப்பாற்றினர்.

நாட்டாமை ரத்தினம்

மறவபட்டியின் நாட்டாமையாக இருந்தபோது திருவிழாவில் சப்பரம் ஊர் சுற்றிவரும்போது சந்தியாகப்பர் சுரூபத்திலிருந்த தங்க கத்தி தவறி விழுந்துவிட்டது. அதை யாரும் கவனிக்கவில்லை. புனித சந்தியாகப்பர், நாட்டாமையின் கனவில் சென்று கத்தி விழுந்த இடத்தைச் சுட்டிக் காட்டினார். பிறகு சென்று பார்த்தபோது தங்க கத்தி கனவில் சொல்லப்பட்ட இடத்தில் இருந்து எடுத்து புனித சந்தியாகப்பர் சுரூபத்தில் கையில் வைக்கப்பட்டது.

மறவபட்டி வண்டிக்கார அந்தோணி(கல்லாத்தான்)

இவர் வாலிப பருவத்தில் மறவபட்டியில் புனித சந்தியாகப்பர் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது இவர் கூட இருந்த நண்பர் இன்று திருவிழா என்று சொன்னபோது இவர் எப்போதும் பார்த்த திருவிழா தானே என்று சொல்லி அசட்டையாக தூங்கச் சென்றுவிட்டார். சந்தியாகப்பர் இவர் கனவில் சென்று வெள்ளை குதிரையில் தகதகவென்று வட்டமாகச் சுற்றி வந்து எச்சரித்தவுடன் சாமி நான் அசட்டையாக சொன்ன வார்த்தைக்கு என்னை மன்னித்துக்கொள் என்று சொல்லி அந்தோணி கையெடுத்து கும்பிட்டவுடன் சந்தியாகப்பர் மறைந்தார்.

உண்டார்பட்டி தச்சு ஆசாரி - ராமர்

இவரிடம் மறவபட்டிக்கு வாகை மரத்தில் சப்பரம் செய்து தரச்சொன்னார்கள் ஊர்மக்கள். மரம் வங்கச் செல்வதற்கு, முதல் நாள் இரவில் இவர் கனவில் ஒரு முதியவர் நீண்ட வெள்ளைத் தாடியுடன் வந்து சப்பரத்தில் ஒரு சட்டமாவது வேங்கை மரம் இருந்தால்தான் சாமிக்கு உகந்தது என்று சொன்னார். பிறகு வேங்கை மரம் வாங்கி வாகை மரத்துடன் இணைத்து சப்பரம் செய்யப்பட்டது.

சேர்வை சௌந்தரம்

இவர் குடும்பத்தில் பிரச்னையாக இருந்த போது இவர் மனைவி சோகமாகக் கோவிலின் தென்புறம் இவருடைய வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த போது சந்தியாகப்பர் சுரூபத்திற்கு நேராக தென்புறம் சன்னலின் பக்கம் தரையில் பளிச்சென்று மின்னியதைக் கண்டார். இதனால் இவர் மனம் ஆறுதல் அடைந்தார்.

மணியார் ஆரோக்கியம் மகன் பன்னீர் செல்வம்

இவர்கள் மறவபட்டி புதூரில் தங்கியிருந்தனர். இவர் கிணற்று வேலை செய்யும் போது கல் ஒன்று காலில் பட்டு வெகுநாளாகப் புண் ஆறாமல் இருந்தது. மந்திரிக்கச் சென்ற போது பூசாரியின் மேல் சந்தியாகப்பரின் தூய ஆவி இறங்கி நீ என்னை மறந்ததால்தான் உனக்கு துன்பம் வருகிறது என்று சொன்னார். நீ மறவபட்டியில் வந்து தங்கு என்று சொன்னவுடன் வந்து தங்கினார். உடனே புண் ஆறியது.

சந்தனம் ஆசிரியருடைய அப்பா

மணியார் அடைக்கலம், இவருடைய வாழ்க்கையில் கடன் அதிகமாக இருந்தது. இவர் மன உருக்கத்துடன் சந்தியாகப்பரை வேண்டி வெங்காய வெள்ளாமை செய்தார். விளைச்சல் நன்றாக விளைந்து கடனை அடைத்துவிட்டு சந்தியாகப்பருக்கு தங்க கிரீடம் செய்து வைத்தார்.

மணியார் நம்பிக்கம்

மகள் செலீன் மேரிக்கு திருமணம் முடிந்து 12 வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லை. மறவபட்டியில் சந்தியாகப்பர் திருவிழா நடந்தபோது நம்பிக்கம் அவர்கள் மகளை ஊருக்கு வரச்சொன்னபோது மகள் வராமல் அவர் கணவரை மட்டும் அனுப்பி விட்டுத் திருச்சியிலேயே தங்கிவிட்டார். செலீன் மேரி, அன்று இரவு அவர் கனவில் சந்தியாகப்பர் சென்று ஏன் இங்கு இருக்கிறாய் என்று சாட்டையால் அடித்து மறவப்பட்டிக்கு போ என்று சொன்னார். மறவபட்டிக்கு வந்து புனித சந்தியாகப்பருக்கு கணிக்கை செலுத்துதிச் சென்றார். அந்த வருடமே செலீன் மேரிக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது.

மறவப்பட்டி சின்னையன் மகன் முருகேசன்

இவர் சிறுமலைப் புதூருக்கு வேலைக்குச் சென்றிருந்தார். அன்று இரவு நேரமாகி விட்டதால் பேருந்து நிறுத்தத்திலேயே விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். நள்ளிரவு 2 மணிக்கு காற்று வேகமாக வீசியது. குதிரை சத்தமும் கேட்டது. அப்பொழுது சந்தியாகப்பர் வெள்ளைக் குதிரையில் வந்து நீ வீட்டுக்குத் திரும்பிப்போ என்று சொல்லி மறைந்துவிட்டார். வீட்டிற்க்கு வந்து பார்த்தபோது முருகேசன் மனைவியின் தங்கை இறந்திருந்தார்.

மணியார் ஆரோக்கியம் (காளை)

இவர் வருடந்தோறும் திருவிழாவிற்கு சப்பரம் ஏற்றச்செல்வது வழக்கம். ஒரு சமயத்தில் தோட்டத்தில் நெல் விளைந்திருந்தது. அதைக் காவல் காப்பதற்க்காக இவருடைய தகப்பனார் போகச் சொன்னார். அதற்க்கு ஆரோக்கியம் என்பவர் எல்லாம் சந்தியாகப்பர் பார்த்துக் கொள்வார் என்று சப்பரம் ஏற்றச் சென்றுவிட்டார். அவருடைய தகப்பனார் மட்டும் தோட்டக் காவலுக்குச் சென்று காவல் காத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் போது கனவில் வெள்ளைக் குதிரையில் சந்தியாகப்பர் சென்று சப்பரம் ஏற்றுவதற்கு போகக்கூடாது என்று ஏன்டா சொன்னாய்? என்று சாட்டையால் அடித்து எச்சரித்தார்.

மறவபட்டி (உலகம்பட்டியார் தோட்டம்) இன்னாசி

இவர் குடும்பத்தோடு சேர்ந்து இவருடைய தோட்டத்தில் ஒரு கிணறு வெட்டலாம் என்று பேசிக் கொண்டிருந்தார். அன்று நள்ளிரவு தூங்கிக் கொண்டிருந்த போது குதிரை வருகிற சத்தம் கேட்டு விழித்தெழுந்தார். அப்பொழுது சந்தியாகப்பர் வெள்ளைக் குதிரையில் வந்து நின்றார். சந்தியாகப்பர் வந்த குதிரையும் சந்தியாகப்பரும் தகதகவென சூரியனைப் போல ஒளிர்ந்தன. சந்தியாகப்பர், இன்னாசி என்பவரிடம் பேசி எந்த இடத்தில் கிணறு தோண்ட வேண்டும் என்று அடையாளமாக மூன்று ஆவாரம் பூக் கொத்துக்கள் ஒடித்துப் போட்டுள்ளேன். அந்த இடத்தில் கிணறு தோண்டுவாய் என்று சொல்லி சந்தியாகப்பர் சென்றுவிட்டார். (இது நேரில் நடந்த சம்பவம்).

மறவபட்டி சேர்வை இன்னாசிி

யகம்மாள் மகன் செபாஸ்டின். இவர் குழந்தையாக இருந்தபோது எதையோ எடுத்துத் தின்றுவிட்டார், இவருக்கு வயிறு பெரியதாக ஊதிக் கொண்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தாடிக்கொம்பில் டாக்டரிடம் பலமுறை வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை. குழந்தை இறந்துவிடுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. அன்று மறவபட்டியில் பகல் திருவிழா நடந்து கொண்டிருந்தது. வீட்டின் முன்பாக சப்பரம் ஊர்வலம் வரும்போது சந்தியாகப்பர் காலில் விழுந்து எங்கள் குழந்தையைக் காப்பாற்றும் என்று பெற்றோர் வேண்டிக் கொண்டார்கள். 5 நிமிடத்திலேயே குழந்தையின் வயிற்றிலிருந்து மிளகாய், வயிற்றுப் போக்காக வெளியேறியது. குழந்தைக்கு சுகம் கிடைத்தது.

மறவபட்டி டெலிபோன் சந்தானம் (சேர்வை)

இவர் திருச்சிக்கு அருகில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த போது ஒரு வாரமாகக் காய்ச்சல், தலைவலியாகப் படுத்திருந்தார். ஒரு நாள் இரவு 1 மணி நேரமாக குதிரை ஓடும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. அங்கும் இங்குமாய் சுற்றிப் பார்த்தார். ஒன்றும் தெரியவில்லை. அப்பொழுது திடீரென்று வெள்ளைக் குதிரையில் சந்தியாகப்பர் வந்து இறங்கி இவரைத் தொட்டார். உடனே காய்ச்சல் நீங்கியது. (இது நேரில் நடந்த சம்பவம்).

மறவபட்டி டெலிபோன் சந்தானம் (சேர்வை)

மனைவி ஜெயமேரி இவருக்கு குழந்தை பிறக்காமல் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது பக்கத்தில் இருந்தவர்கள் சந்தியாகப்பர் சுரூபத்தின் பாதகத்தைக் கழுவி தீர்த்தத்தைக் கொண்டு வந்து குடிக்க கொடுத்தார்கள். 5 நிமிடத்தில் குழந்தை சுகப்பிரசவமாக பிறந்தது.

மறவபட்டி வேலன் மகன் காரி

இவர் சிறு குழந்தையாக இருந்தபோது ஜன்னி வியாதி வந்து 3 நாட்கள் மிகவும் படுத்த படுக்கையாக கிடந்தார். வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மிகவும் துக்கத்துடன் இருந்தனர். அப்போது இவர் தந்தை வேலனின் கனவில் சந்தியாகப்பர் வெள்ளைக் குதிரையில் சென்று ஒன்றும் கவலைப்படாதே எல்லாம் சரியாகி விடும் என்று சொல்லி மறைந்தார். வேலன் உடனே எழுந்து கோவில் பிள்ளை வீட்டிற்குச் சென்று கோவில் பிள்ளையை எழுப்பி சந்தியாகப்பரின் பாதத்தை கழுவி தீர்த்தத்தை எனக்கு கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டுபோய் குழந்தைக்கு கொடுக்க உடனே சுகமாகிவிட்டது.

மறவபட்டி மணியார் வேளாங்கண்ணி மனைவி சேசம்மாள்

இவர் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது குதிரை ஓடும் சத்தம் கேட்டது. வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்த போது வெள்ளைக் குதிரையில் சந்தியாகப்பர் பளிச்சென மின்னுமாறு வீதியில் போய்க் கொண்டிருந்தார்.

மறவபட்டி பெரியசாமி மகன் பொன்னையன்

இவர் 7 வயதாக இருந்த போது இவருடைய அப்பாவுடன் தாடிக்கொம்பிலிருந்து நள்ளிரவில் மறவபட்டிக்கு திரும்பும்போது வழியில் பேய் இவர்களை வழிமறித்தது. சந்தியாகப்பரே எங்களை காப்பாற்று என்று சொல்லியவுடன் பழைய கோவிலிருந்து சந்தியாகப்பர் வெள்ளைக்குதிரையில் சென்று பேயை அடித்துவிரட்டி இவர்களைக் காப்பாற்றினார். (இது நேரில் நடைபெற்ற சம்பவம்)

மறவபட்டி பொன்னையன் மனைவி லெட்சுமி

இவர்கள் மகன் பழனிச்சாமி சிறுகுழந்தையாக இருந்தபோது உடல்நலம் மிகவும் சரியில்லாமல் கிடந்தார். இரவு 2 மணிக்கு லெட்சுமி வீட்டை விட்டு வெளியே வந்து சந்தியாகப்பரே என் மகனைக் காப்பாற்று என்று மண்டியிட்டு வேண்டினார். சந்தியாகப்பர் பழைய கோவில் கோபுரத்தில் இருந்து மின்னல் போல் தோன்றி இவருடைய வீட்டருகில் வந்து எல்லாம் சரியாகிவிடும் கவலைப்படாதே என்று கூறினார். உடனே பழனிச்சாமிக்கு உடல் நலம் கிடைத்தது.

மறவபட்டி குழந்தைவேல் மகன் மாணிக்கம்

இவர் இலங்கைக்கு நாடகம் நடிக்கச் சென்றிருந்தார். அப்பொழுது மறவபட்டியில் திருவிழா சமயம் என்பதால் தப்புக்கொட்ட ஆள் இல்லை. அப்பொழுது சந்தியாகப்பர் இவர் கனவில் சென்று சாட்டையால் அடித்து ஊருக்குத் திரும்பி வரச்சொன்னார்.

மறவபட்டி பெரியசாமியின் மகன் பொன்னையன்

இவர் நாடகக் குழுவுடன் சேர்ந்து நாடகம் நடிக்க கரூருக்குச் சென்றுவிட்டார். அன்று மறவபட்டியில் திருவிழாக் கொடியேற்றம் நடைபெற்றது. அப்பொழுது பொன்னையன் உடல்நலமில்லாமல் தூங்கிவிட்டார். இவர் கனவில் சந்தியாகப்பர் வெள்ளைக் குதிரையில் தோன்றி மறவபட்டி திருவிழாவுக்குத் தப்படிக்க நீ உடனே செல் என்று எச்சரித்தார்.

தவசிமேடை பால்ராஜ் மனைவி விஜயாமேரி

இவருக்கு இரட்டைக் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதன் பின்னர் இவர் சந்தியாகப்பரிடம் வந்து சந்தியாகப்பரின் காலைப் பிடித்து நம்பிக்கையோடு எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். பிறந்தால் உம் பெயரை வைக்கிறேன் என்று வேண்டியுள்ளார். மறு வருடமே விஜயாமேரிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மராம்பாடி கட்டமணியர் குடும்பம் ஆரோக்கியம்

இவர் அய்யம்பட்டியில் இருந்து மாட்டு வண்டி நிறைய வெள்ளைச் சோள மூட்டை ஏற்றிக்கொண்டு மராம்பாடிக்கு சென்று கொண்டிருந்தார். உணடார்பட்டிக்கு அருகே ஆற்றில் இறங்கி ஏறும்போது மூட்டையின் பாரத்தால் வண்டி கீழே தாழ்ந்து மாடுகள் மேலே தூக்கிவிட்டது அப்பொழுது இவர் காப்பாற்றுங்கள் என்று கத்தியவுடன் மறவபட்டி கோவிலின் கோபுரத்திலிருந்து மின்னல் போல் தோன்றி சந்தியாகப்பர் வெள்ளைக் குதிரையில் ஆற்றுக்கு அருகில் சென்றவுடன், மாட்டுவண்டி மேலே ஏறிச்சென்றுவிட்டது. பிறகு சந்தியாகப்பர் வந்த வேகத்தில் மறவபட்டி ஆலயத்துக்குத் திரும்புவதையும் ஆரோக்கியம் நேரில் பார்த்தார். (இது நேரில் நடைபெற்ற சம்பவம்)

சந்தியாகப்பரின் சுரூபம்

பெயிண்ட் அடிப்பதற்காக குட்டத்து ஆவரம்பட்டியில் உள்ள அருமை என்பவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஒரு சுரூபம் தானே நான் ஏன் அங்கு வரவேண்டும். நீங்கள் அதை இங்கு கொண்டு வாருங்கள் பெயிண்ட் அடித்து தருகின்றேன் என்று கூறிவிட்டார். ஆகவே ஊரின் பெரியவர்கள் நான்கு கட்டைகளை கட்டி அதன் மேல் சந்தியாகப்பரின் சுரூபத்தை வைத்து எடுத்துச் சென்றனர். ஊரின் எல்லைக்கு வந்த உடனே சந்தியாகப்பரின் சுரூபமானது பாரம் அதிகமாகியது தூக்கி சென்ற நான்கு பேரும் தொடர்ந்து செல்ல முடியாமல் போனது. ஆகவே சுரூபத்தை ஆலயத்தில் வந்து வைத்துவிட்டனர். அன்று இரவு சந்தியாகப்பர் குட்டத்து ஆவரம்பட்டிக்கு சென்று நீதான் என் ஸ்தலத்திற்கு வரவேண்டும். நானா உன் வீட்டிற்கு வருவது என்று சொன்னவுடனே அவர் உடனே கிளம்பி மறவபட்டிக்கு வந்து சந்தியாகப்பரிடம் மன்னிப்புக் கேட்டு சந்தியாகப்பரின் சுரூபத்திற்கு வர்ணம் அடித்துக் கொடுத்தார்.

மறவபட்டி ஞானிக்கவுண்டர் குடும்பம், அந்தோணி

இவருக்கு காலில் வெகுநாளாக ஆறாத புண் இருந்தது. இவருடைய கனவில் சந்தியாகப்பர் வெள்ளைக் குதிரையில் தோன்றி இவர் காலில் இருந்த புண்ணை மிதித்தார். காலையில் பார்த்தபோது காலில் இருந்த புண் ஆறி இருந்தது.

மேனேஜர் குடும்பம், டெலிபோன் சேசுராஜ்

மனைவி சவரியம்மாள் (தங்கத்தாய்). இவருக்கு வயிற்றில் கட்டி வந்துவிட்டது. சுமார் ஒரு வருடமாக மருத்துவம் செய்தும் குணமாகவில்லை. பிறகு மறவபட்டி புனித சந்தியாகப்பரின் பாதத்தைக் கழுவி தீர்த்தத்தைக் குடித்தார். பிறகு வயிற்றில் இருந்த கட்டி குணமாகிவிட்டது.

கோயம்பத்தூர் சுசீலா மகன் ராஜ்

ஆரோக்கிய பிரியா இவர்கள் மறவபட்டியில் புனித சந்தியாகப்பரிடம் ஆண் குழந்தை வரம் வேண்டினர். அந்த வருடமே அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து விட்டது. அவர்கள் சாட்சி சொல்வதாக உறுதி கொடுத்துச் சென்றார்கள். ஆனால் மறவபட்டிக்கு வந்திருந்தும் சாட்சி சொல்லாமலே கோயம்பத்தூருக்கு சென்று விட்டார்கள். அன்று இரவே புனித சாந்தியாகப்பர் சுசீலாவின் கனவில் தோன்றி ஊரில் எல்லோரும் எனக்கு சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நீ ஏன் சாட்சி சொல்லாமலே வந்துவிட்டாய் என்று எச்சரித்தார். உடனே எழுந்து கோயம்பத்தூர் செல்வபுரத்தில் உள்ள வீட்டிலேயே சுசீலா மண்டியிட்டு அழுது சாமி என்னை மன்னிச்சுக்கோங்க மறந்துட்டேன் என்று சொன்ன பிறகு சந்தியாகப்பரின் காட்சி மறைந்தது.

மறவபட்டி மணியார் சிமியோன்

இவர் மானாவாரி காட்டில் நெல் விதைத்து விளையும் சமயத்தில் மழையில்லாமல் பயிர் வாடிக் கொண்டிருந்தது. அவர் மனம் மிகவும் துன்பப்பட்டு கவலையாக இருந்தார். அன்று இரவு இவர் கனவில் சந்தியாகப்பர் தோன்றி கவலைப்படாதே நெல் விளைந்து விடும் என்று சொல்லி மறைந்தார். மறுநாள் மாலையில் நல்ல மழை பெய்தது. சந்தியாகப்பர் சொன்னது போல் 10 மூட்டை நெல் கிடைத்தது.

மறவபட்டி கோவில் பிள்ளை ஜோசப்

3 மாதங்களாக வயிற்று வலியால் துடித்தார். மருத்துவமனையில் பலமுறை மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. சந்தியாகப்பரின் தீர்த்தம் குடித்தவுடன் வயிற்றுவலி படிப்படியாக குறைந்து விட்டது. பிறகு மொட்டை போட்டு காணிக்கை செலுத்தினார்.

மணியார் மரியராஜ் மகன் செபஸ்தியார்

இவரும் இவர் மனைவியும் ஆண் குழந்தை வரம் வேண்டி புனித சந்தியாகப்பரின் பாதத்தைக் கழுவி தீர்த்தம் குடித்துள்ளனர். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மறவபட்டி பரஞ்ஜோதி

இவர் நள்ளிரவில் தூங்கி எழுந்தபோது சந்தியாகப்பர் வெள்ளைக் குதிரையில் தேரோடும் வீதியில் ஊர்வலம் வருவதைப் பார்த்தார். (இது கனவு அல்ல நேரில் பார்த்தது)

கொத்தனார் ராபர்ட்

புதிதாக கட்டப்பட்ட சந்தியாகப்பரின் சிற்றாலயத்தில் கட்டிட வேலைகள் நடைபெற்ற பொழுது ஆலய கட்டிட பீடத்திலிருந்து ஒரு விதமான குறிஞ்சி பூவின் நறுமண வசனை வருகிறது என்று தெரிவித்தார்.

மறவபட்டி நாட்டாமை செல்லையா மகன் ஜான்

மரியாள் இவர்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தார்கள். திருவிழா அன்று சப்பரம் ஊர் சுற்றி வரும் போது சந்தியாகப்பரின் சப்பரத்தின் முன்பாக நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து குழந்தை பாக்கியம் வேண்டினர். அந்த வருடமே அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

புனித சந்தியாகப்பர் திருத்தல திறப்பு விழாவன்று திருத்தலத்தின் பீடத்திலிருந்தும் தீர்த்த தண்ணீரிலுருந்தும் நறுமணம் வாசனை வந்தது. மக்கள் அனைவரும் ஆச்சரியமாக பிரமித்து போனார்கள். புனித சந்தியாகப்பரை மிகவும் பயபக்தியுடன் வணங்கி சென்றார்கள்.

கோயம்பத்தூர் தச்சன் தோட்டம், சௌமியா

இவரது தாத்தா வாசுதேவன், ஒரு நபரிடம் ரூபாய் 50 ஆயிரம் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டார். சில நாட்களில் அந்த நபர் தலைமறைவாகி விட்டார். நாங்கள் பணம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்று பரிதவித்த நிலையில் எனது நண்பரின் மூலமாக மறவபட்டி புனித சந்தியாகப்பரின் வல்லமையைக் கேள்விப்பட்டு ஆலயத்தில் அமர்ந்து ஜெபம் செய்தபோது சந்தியாகப்பர் இவருக்கு முன்பாகச் சென்றார். மறுநாளே இவருடைய தாத்தாவிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர், மூன்று நாட்களுக்குள் பணத்தைத் தந்து விடுகிறேன் என்று சொல்லி வாங்கிய பணத்தைக் கொடுத்துவிட்டார். இவர்களுக்கு புனித சந்தியாகப்பர் செய்த நன்மைக்காக அரை பவுன் தங்கச் செயினைக் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.

கோயம்பத்தூர் ரத்தினபுரி

மனோன்மணியின் தங்கை மகன் பாபு. இவருக்கு திடீரென மயக்கம், வாந்தி வரவே மருத்துவமனையில் சோதித்துப் பார்கையில் ரத்தம் மிகக் குறைந்து வெள்ளை அணுக்கள் உற்பத்தி ஆவதில்லை. மேலும் மஞ்சள் காமாலை நோயும் உள்ளது என்று மருத்துவர்கள் நம்பிக்கையின்றி கூறினார்கள். அப்போது இவர் மிகவும் கவலையாக இருக்கையில், மறவபட்டி புனித சந்தியாகப்பரின் வல்லமையை ஒரு குருவானவர் சொல்லக்கேட்டு அதை அறிந்த அவர்கள் சந்தியாகப்பரிடம் மன்றாடி வேண்டினர். அதன்படி மூன்று நாட்களுக்குப் பிறகு மேற்கூறிய எந்த வியாதியும் இல்லாமல் நல்ல சுகம் கிடைத்தது.

மறவபட்டி மணியார் குடும்பம் செபஸ்தியார் மனைவி அந்தோணியம்மாள்

இவருக்கு வயிற்று வலி அதிகமாக வந்தது. மருத்துவமனை சென்று ஊசி போட்டும் வயிற்று வலி நிற்கவில்லை. பிறகு டாக்டர் கல்லடைப்பு உள்ளது. ஸ்கேன் எடுத்து வாருங்கள் என்று சொல்லிவிட்டார். ஆனால் இவர்கள் மறவபட்டி புனித சந்தியாகப்பரின் பாதங்களை கழுவிய தீர்த்தத்தைக் குடித்தவுடன் வயிற்று வலி நீங்கியது. கல்லடைப்பு சரியாக வேண்டும் என்றும் வேண்டினர். பிறகு ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது வயிற்றில் கல் இருந்தது உண்மை என்றும் ஆனால் இப்போது கல் கரைந்து விட்டது என்றும் டாக்டர் தெரிவித்தார்.

மறவபட்டி அகஸ்தீன்

இவருக்கு மூலம் வியாதி இருந்தது. மலத்தின் வழியாக ரத்தம் வெளியேறியது. மருத்துவமனை சென்று மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை. புனித சந்தியாகப்பரின் பாதங்களைக் கழுவிய தீர்த்தத்தைக் குடித்தவுடன் ரத்தப்போக்கு நின்றது.

தாடிக்கொம்பு பாரதி நகர், பி. முருகானந்தம்

இவர் குடும்ப பிரச்னையால் மிகுந்த மன வேதனையுடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று சில காலமாக மன நிம்மதி இல்லாமல் இருந்தார். 2016 - ம் ஆண்டு மார்ச் மாதம் திங்கள் கிழமை இரவு பஞ்சு மில்லில் வேலை செய்வதற்காக ஓய்வு எடுக்கும் அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது கனவில் பளிச்சென்று மின்னலைப் போல் மின்னியது. உடனே இவர் விழித்துக் கொண்டார். அப்பொழுது இவர் முன்னே புனித சந்தியாகப்பர் தோன்றி நீ என் ஸ்தலத்திற்கு பலாப்பழம் வாங்கி வந்து மக்களுக்குத் தானம் செய்து மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கி வந்தால் உன் குடும்பம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நல்ல முறையில் வளரும் என்று சொல்லி மறைந்தார். இவர் அந்த காட்சியைக் கண்டத்திலிருந்து விடியும் வரை இவர் உடம்பில் மின்சாரம் தாக்கியது போல் இருந்தது. இவருக்கு சந்தியாகப்பர் திருத்தலம் எங்கு உள்ளது என்று தெரியாது. விசாரித்தபோது சந்தியாகப்பர் திருத்தலம் மறவபட்டியில் இருப்பது தெரிய வந்தது. பிறகு சந்தியாகப்பர் திருத்தலத்திற்கு வந்து புனித சந்தியாகப்பர் சொன்னது போல இவர் செய்தார். இப்பொழுது இவரும் இவர் குடும்பத்தாரும் நன்றாக இருக்கிறார்கள்.

திருச்சி, எடமலைப்பட்டி புதூர் வேளாங்கண்ணி

இவருடைய மனைவி வி. செல்வமேரிக்கு உடம்பில் கை, கால்கள் வீக்கமாகியும் வலி உண்டாகியும் இருந்தது. மருத்துவ மனையில் சென்று மருத்துவம் பார்த்தும் குணமகவில்லை. பிறகு மறவபட்டி புனித சந்தியாகப்பரின் தீர்த்தத்தைக் கொண்டு சென்று குடித்து உடம்பில் தடவியவுடன் உடம்பில் உள்ள வீக்கம் வற்றி உடல்வலி குணமாகிவிட்டது.

கோயம்பத்தூர், விஜி

இவருக்கு உடம்பில் அரிப்பு இருந்து வந்தது. மறவபட்டி புனித சந்தியாகப்பரின் தீர்த்தம் தடவியவுடன் அரிப்பு குணமாகி விட்டது. இவர் ஒரு மலையாளி. இவருக்குத் தமிழ் முழுமையாக வாசிக்கத் தெரியாது. புனித சந்தியாகப்பர் புத்தகத்தைப் படித்தவுடன் தமிழ்மொழி சரளமாகப் பேசவும், எழுதுவதும் முடிகிறது. இவருடைய மகள் மார்கிரேட்டுக்கு கால்வலி இருந்தது. புனித சந்தியாகப்பர் தீர்த்தத்தை தடவியவுடன் கால் வலி குணமாகிவிட்டது.

மறவபட்டி அப்பாஸ் மகன் செல்வராஜ்

இவர் சுமார் 10 வருடமாக வலதுபுறம் இடுப்பிலிருந்து பாதம் வரை ஒரே வலியாக இருந்தது. இதனால் பலமான வேலையும் செய்ய முடியவில்லை. புனித சந்தியாகப்பரின் தீர்த்தத்தை தடவியவுடன் இவருடைய உடம்பிலிருந்து ஏதோ ஒரு கட்டு உடைவது போலத் தெரிந்தது. பிறகு காலில் எந்த வலியும் இல்லை. இப்பொழுது அனைத்து வேலைகளும் செய்ய முடிகிறது.

20.04.2016 அன்று இரவு 9 மணிக்கு ஆலயத்தின் முன் மணல் பகுதியில் அற்புதமாக ஊற்றுத் தண்ணீர் காணப்பட்டது. பிறகு 25.04.2016 அன்று மாலை 6 மணிக்கும் 28.04.2016 அன்று 9 மணிக்கும் அதைத் தொடர்ந்து 81 முறை நீரூற்று வந்துள்ளது. இதனால் அநேகமான புதுமைகளும் அற்புதங்களும் நடைபெற்று வருகிறது.

திருச்சி, போறத்தாக்குடி - இருங்களூர்

மெசியா இவருடைய மனைவி எஸ்தர் சேபா. இவருக்கு திருமணம் நடந்து 6 மாதத்தில் SLF என்ற நோய் வந்து 2 வருடம் அவதியுற்றார். பல மருத்துவங்களும் பார்த்து குணம் பெறாத நிலையில் வேலூர் மருத்துவமனைக்குச் சென்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். மறவபட்டியில் அவருடைய பெரியம்மா வசித்து வந்தார்கள். தங்கை மகள் மருத்துவமனையில் இருப்பதை கேள்விப்பட்டு புனித சந்தியாகப்பரிடம் வேண்டி பாதங்கழுவிய தீர்த்தத்தை வாங்கிக் கொண்டுபோய் கொடுத்தார்கள். தீர்த்தத்தை குடித்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக 1 வாரத்திலேயே குணம் அடைந்தேன் என்று சாட்சி சொல்கிறார்கள்.

திண்டுக்கல், புகையிலைப்பட்டி, ஜார்ஜ் பாக்கியராஜ்

குளோரி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. அதற்க்குப் பின் 10 வருடம் குழந்தையில்லை. பின்பு புனித சந்தியாகப்பரிடம் வேண்டிச் சென்றார்கள். பின்பு பாதம் கழுவிய தீர்த்தத்தையும் குடித்தார்கள். அடுத்த 10 வது மாதமே இரு குழந்தைகள் பிறந்தது. இரண்டுமே ஆண் குழந்தைகள் சந்தியாகப்பருக்கு நன்றி.

திண்டுக்கல், தாடிக்கொம்பு அழகுபட்டி, சிவகுமார்

சிவகாமி சுந்தரி இவர்களுக்கு திருமணம் நடந்து 25 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. மறவபட்டியில் புனித சந்தியாகப்பரின் தீர்த்தத்தை எடுத்துச் சென்று வீடு முழுவதும் தெளித்தனர். பின்பு வீட்டிற்குள் நறுமண வாசனை வந்தது. இவரது கனவில் சந்தியாகப்பர் தோன்றி அவரின் வயிற்றில் தொட்டார். அடுத்த 10 வது மாதம் இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தது. சந்தியாகப்பருக்கு நன்றி.

திண்டுக்கல், உலகம்பட்டி, அந்தோணி

இன்னாசியம்மாள் இவருக்கு 4 வருடமாக உதிர போக்கு இருந்து வந்தது. பின்பு ஒரு நாள் இவர் கனவில் புனித சந்தியாகப்பர் மனித சாயலாக தோன்றி சந்தியாகப்பர் கோவிலுக்கு சென்று வா நோய் குணமாகும் என்று கூறினார். இவருக்கு எந்த சந்தியாகப்பர் கோவில் என்று தெரியவில்லை என்று கூறினார். அந்த கோவிலை நான் கூறுகிறேன் என்று கூறியவுடன் கனவு முடிந்தது. பின்பு ஆலயத்தில் ஓர் குருவானவரிடம் செபிக்கச் சென்ற போது அவர் புனித சந்தியாகப்பர் ஆலயம் மறவபட்டியில் உள்ளது எனக் கூறினார். அவர் கூறிய உடனே எனக்கு இரத்தப்போக்கு நின்றது. பின்பு சந்தியாகப்பர் ஆலயத்திற்கு வந்து நன்றி செலுத்தினார்.

கோயம்பத்தூர், காந்திபுரம், லதா

இவருக்கு SLF என்ற நோயினால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதியுற்றார். பின்பு மருத்துவர் சென்னை அடையாருக்கு கூட்டிச்செல்லுங்கள் என்று கூறினார். பின்பு சந்தியாகப்பரிடம் வேண்டிச் சென்றனர். பின்பு மருத்துவமனையில் ஆய்வு செய்து பார்த்தபோது SLF இருந்ததற்கான அடையாளம் கூட காணவில்லை. மருந்து மற்றும் மாத்திரையில் குணம் அடையாத நோய் புனித சந்தியாகப்பரின் பரிந்துரையால் குணம் அடைந்தது என்று சாட்சி கூறினார்.

மறவபட்டி - லூகாஸ்

என்ற இளைஞன் (ஒரு சில மாதத்திற்க்கு முன் அன்று இரவு) வீட்டில் அமர்ந்திருந்தான். வெளியில் குதிரை ஓடும் சத்தம் கேட்டது. ஆர்வத்தோடு வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்தால் ஒன்றும் காணவில்லை. பிறகு அரை மணி நேரம் கழித்து மீண்டும் குதிரை ஓடும் சத்தம் கேட்டது. வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்தால் சூரியனை போல் பிரகாசமான ஒளி. ஒளியில் சந்தியாகப்பர் குதிரையின் மேல் அமர்ந்தபடி கையில் கத்தி கேடயத்துடன் பூமியிலிருந்து 3 அடி மேல் சென்றதை நேரடியாக பார்த்தான். பயம் கலந்த ஆச்சரியத்தில் குளிர் காய்ச்சல் வந்தது. பிறகு திருத்தலத்தில் சாட்சி சொல்லவும் பயமும் காய்ச்சலும் குணமடைந்தது.

திண்டுக்கல், என். பஞ்சம்பட்டி வீரதாஸ்

வெள்ளையம்மாள் எங்கள் குழந்தைக்கு இதயத்தில் இடது வெண்டிரிக்கலில் நீர் கட்டிகள் இருந்தது. புனித சந்தியாகப்பரின் கோவிலுக்கு வந்து வேண்டி தீர்த்தத்தை குடித்து எண்ணெய் தடவி வந்தோம். பூரண சுகம் கிடைத்தது. சந்தியாகப்பருக்கு நன்றி.

கரூர், புலியூர் - விமல் - சித்ரா

இவர்கள் மறவபட்டி புனித சந்தியாகப்பர் கோவிலுக்கு வந்து தங்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று வேண்டினார்கள். அந்த வருடமே அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த வருடமே அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு புனிதரின் பெயரையே வைத்துள்ளோம். கேட்ட வரங்களை கொடுக்கும் புனித சந்தியாகப்பருக்கு கோடி நன்றிகள்.

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் - ஞானமுத்து - மணிமேகலை

இவர்களுடைய மகளுக்கு திருமணமாகி 3 வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லை. மறவபட்டி புனித சந்தியாகப்பர் திருத்தலத்திற்கு வந்து புனிதரை வேண்டி பாதங்கழுவிய தீர்த்தத்தை வாங்கி சென்று தினமும் குடித்து வந்தார். அந்த மாதமே குழந்தை உருவாகி அடுத்த 10 வது மாதம் ஆண் குழந்தை சுகப்பிரசவமாக பிறந்தது. புனித சந்தியாகப்பருக்கு கோடி நன்றிகள்.

மறவபட்டி, பிறகரை - அருள் அற்புதராஜ்

அமல ஷர்மிளா தம்பதிக்கு திருமணம் ஆகி 2 வருடமாக குழந்தை இல்லை. புனித சந்தியாகப்பர் திருவிழாவிற்கு வந்து வேண்டிச் சென்றனர் அடுத்த 10 வது மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது, குழந்தைக்கு சந்தியாகப்பர் பெயரை சூட்டினர்.

மறவபட்டி, பிறகரை - அருள் அற்புதராஜ்

இவர் நல்ல வேலை வேண்டி ஆடி மாத திருவிழாவிற்க்கு மாலை அணிந்து விரதம் இருந்தார், புனித சந்தியாகப்பர் அவர் கனவில் தோன்றி தை மாதம் பகல் திருவிழாவின் போது உனக்கு நல்ல சம்பளத்தில் வேலைக்கான உத்தரவு வந்து சேரும் என்று சொல்லி மறைந்தார். அவர் கூறியது போலவே நல்ல சம்பளத்தில் பெரிய நிறுவனத்தில் இருந்து வேலைக்கான உத்தரவு மின்னஞ்சல் மூலமாக பகல் திருவிழா நடந்து கொண்டிருக்கும் போதே வந்து சேர்ந்தது. புனித சந்தியாகப்பருக்கு கோடி நன்றிகள்.

s