திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு கிராமம், மறவபட்டியில் புனித சந்தியாகப்பர் ஆலயம் சுமார் 200 வருடங்களுக்கு முன்பு கூரைக் கோவிலாக இருந்தது. இதன் பின்பு கூரைக் செங்கல், சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டு புனித அடைக்கல மாதா ஆலயம் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த ஆலயத்தில் இருந்த புனித சந்தியாகப்பர், செபஸ்தியார், அடைக்கல மாதா, அந்தோணியார் உள்ளிட்ட புனிதர்களை மக்கள் தொடர்ந்து வணங்கினர். இந்த ஆலயத்தில் இருக்கும் புனித சந்தியாகப்பர் சுரூபம் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக மறவபட்டியில் அருள் நிறைந்து சக்தி விளங்கி கொண்டிருக்கிறது.
இந்த பழைய தொன்மை வாய்ந்த ஆலயம் சிறியதாக இருந்ததாலும், மறவபட்டி பங்கு மக்கள் தொகை பெருகிய காரணத்தாலும் இந்த கோவிலை இடித்துவிட்டு புதிய பெரிய கோவிலாக கட்டலாம் என்று குருக்களும், ஊர் பொதுமக்களும் கூடி முடிவு செய்தனர். அதை தொடர்ந்து புதிய அடைக்கல மாதா ஆலயம் பழைய ஆலயத்துக்கு மேற்கில் கட்டி புனித சந்தியாகப்பர், செபஸ்தியார், அடைக்கல மாதா, அந்தோணியார் உள்ளிட்ட புனிதர்களின் சுரூபங்கள் புதிய அடைக்கல மாதா ஆலயத்தில் வைக்கப்பட்டு 12.10.2008 அன்று புனித படுத்தும் விழா நடைபெற்றது.
பின்னர் பழைய தொன்மை வாய்ந்த அடைக்கலமாதா ஆலயத்தை இடிப்பதற்கு ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு வேலை செய்யும் போது ஆலயத்தை இடிக்க முடியாமல் சென்று விட்டனர். அதன் பிறகு வேறு ஒரு ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு பழமையான அடைக்கல மாதா ஆலயம் இடிக்கப்பட்டது. புதிய அடைக்கல மாதா ஆலயத்தில் புனித சந்தியாகப்பர், செபஸ்தியார், அடைக்கலமாதா, அந்தோணியார் உள்ளிட்ட புனிதர்களை பங்கு மக்கள் தொடர்ந்து வணங்கி வந்தனர். மறவபட்டியில் இரு நூற்றாண்டுக்கு மேலாக தொடர்ந்து வருடந்தோறும் பாரம்பரியமிக்க புனித சந்தியாகப்பர், புனித அந்தோணியார் உள்ளிட்ட புனிதர்களுக்கு ஊர் மக்கள் விழா கொண்டாடுவது வழக்கம்.
கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்கம் போல் புனித சந்தியாகப்பர், புனித அந்தோணியார், செபஸ்தியார், அடைக்கல மாதா உள்ளிட்ட புனிதர்களுக்கு ஊர் மக்களால் விழா கொண்டாடப்பட்டது. அச்சமயம் விழா முடிந்து புனித சந்தியாகப்பர், புனித அந்தோணியார், செபஸ்தியார், அடைக்கல மாதா உள்ளிட்ட புனிதர்களின் சுரூபங்களை ஊர் மக்கள் சப்பரத்தில் இருந்து இறக்கி புதிய அடைக்கல மாதா ஆலயத்திற்கு கொண்டு செல்லும் வழியில் மேனேஜர் ஞானையா புனித சாந்தியப்பர் சுரூபத்தை கொண்டு செல்லும் போது பழைய அடைக்கல மாதா ஆலயம் இருந்த இடத்தை விட்டு அவரால் நகர முடியாமல் நின்று விட்டார். பின்பு சிறிது நேரம் கழித்து புதிய அடைக்கல மாதா ஆலயத்திற்கு புனிதர்களின் சுரூபங்கள் கொண்டு செல்லப்பட்டது.
அப்போழுது ஒரு சில நீதிமான்களின் கனவில் புனித சந்தியாகப்பர் தோன்றி நான் பழைய ஆலயம் இருந்த இடத்தில் தான் இருக்கிறேன் என்று கூறினார். இக்காரணங்களால் ஊர் மக்கள் கூடி பழைய ஆலயம் இருந்த இடத்தில் புனித சந்தியாகப்பருக்கு உடனடியாக ஆலயம் அமைக்க முடிவு ய்யப்பட்டது. புனித சந்தியாகப்பர் ஆலய கட்டுமானப் பணி சுமார் ஒரு வருட காலத்திலேயே நிறைவடைந்து 28.01.2016 அன்று புனித சந்தியாகப்பர் திருத்தலம் புனிதப்படுத்தும் விழா நடைபெற்றது. அப்பொழுது மந்திரித்த தீர்த்தத்திலிருந்தும் திருத்தலப் பீடத்திலிருந்தும் நறுமண வாசனை வந்தது.
ஓவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 4 வது வாரம் வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சன்னிக்கிழமை பகல் திருவிழா நடைபெறும். 20.04.2016 அன்று இரவு 9 மணிக்கு புனித சந்தியாகப்பர் திருத்தலத்தின் முன் மணல் பகுதியில் முதன் முறையாக அற்புத நீரூற்று ஆனது வந்தது. பிறகு 25.04.2016 அன்று காலை 9 மணிக்கும் குணமளிக்கும் அற்புத திருநீருற்று அடுத்தடுத்து வந்தது. அன்று முதல் இன்று வரை 81 முறைக்கும் மேலாக புனித சந்தியாகப்பரின் வல்லமை நீரூற்றாக வந்துள்ளது.
ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு புனித சந்தியாகப்பருக்கு நவநாள் செபமும், திருப்பலியும் நற்கருணை ஆசிர்வாதமும் நடைபெறும்.
ஒவ்வொரு வருடமும் புனித சந்தியாகப்பருக்கு ஆடிமாதம் 2 வது வாரம் வெள்ளிக்கிழமை இரவு, சனிக்கிழமை பகல் திருவிழா நடைபெறும்.
s